Saturday, January 21, 2017

"தமிழர்கள் நாட்டிற்கே வழிகாட்டியுள்ளார்கள்" : மார்க்கண்டேய கட்ஜூ பெருமிதம்

"தமிழர்கள் நாட்டிற்கே வழிகாட்டியுள்ளார்கள்" : மார்க்கண்டேய கட்ஜூ பெருமிதம்.
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழிகாட்டுவதாக அமைந்துள்ளது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கட்ஜு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக மக்கள் பெற்றிருக்கும் வெற்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கவனிக்க வேண்டிய ஒன்று என அவர் தெரிவித்துள்ளார். ஜாதி, மதம், பிராந்தியம் கடந்து இந்திய மக்கள் ஒன்றுபடுவார்களா என்ற சந்தேகத்தை இந்த போராட்டம் போக்கிவிட்டதாகவும் மார்க்கண்டேய கட்ஜூ குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக் களத்திற்குள் அரசியல்வாதிகளை அனுமதிக்காதது மிகச்சிறந்த நடவடிக்கை என தெரிவித்துள்ள கட்ஜூ,பெரும்பாலான அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் என்றும், நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்றும் விமர்சித்துள்ளார். தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி, ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமான வெற்றி என தெரிவித்துள்ள மார்க்கண்டேய கட்ஜூ, வறுமை, வேலைவாய்ப்பின்மை, சுகாதாரம், கல்வி என பலவற்றில் நிலவும் பிரச்னைகளுக்கு நம்மால் ஒன்றுபட்டு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை இந்த போராட்டம் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஒன்றுபட்டால், அதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதையே ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உணர்த்தியுள்ளதாகவும், தங்களின் சிறந்த போராட்ட வழிமுறைகளால் தமிழர்கள் நாட்டிற்கே வழிகாட்டியுள்ளதாகவும் கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment